திருவண்ணாமலையில் அருணகிரிநாதரின் சமாதி எங்குள்ளது??

தமிழறிந்த ஆன்மீக அன்பர்களுக்கு, அருணகிரிநாதர் யார் என்ற அறிமுகம் தேவையில்லை. செந்திலன் அருளுடைச் சந்தப்பெருங்கவிக்கோ அருணகிரிநாதர் அவதரித்த தலம் அருணாசலா என்று போற்றித் துதிக்கப்படும் தொன்மையான சிவ ஸ்தலமான திருவண்ணாமலை.

பெண்பித்தனாய்த் திரிந்து, அதனால் பொருளிழந்து, உடல் நலிவுற்ற தனது இழிநிலையை உணர்ந்து மனங்கலங்கித் திருவண்ணாமலையின் ஹிருதயமாக உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கோபுரத்திலிருந்து உயிர்விடத் துணிந்து குதித்த அவரை எந்தை ஈசனின் ஈடிலா இளைய செல்வனாகிய ஸ்கந்தப் பெருமான் தடுத்தாட்கொண்டு, கணத்தில் ஞானோதயம் அளித்து, 'இனி நீர் எம்மைப் பற்றிப் பாடுக' என்று பணித்தான். அடியார்க்கு அருட்பெருங்கருணையை அள்ளி வழங்கிய எம்பிரான் முருகப்பெருமான், 'கம்பத்து இளையனார்' என்ற திருநாமத்துடன், அண்ணாமலையாரைத் தரிசிக்க வரும் பக்த கோடிகளுக்கு ஆசி வழங்கி ஆலயத்துள் அனுப்புகின்றான்.

அம்பலத்தரசனின் அறுமுகக் குழந்தையின் அருளால், உன்மத்தத்திலிருந்து உன்னத நிலைக்கு ஒரே கணத்தில் உயர்ந்த அடியவர் அருணகிரியார் பதைத்தார். கவி பாடுவது அவருக்குப் புதியதல்ல. ஆனால் தமிழ்க் கடவுளான கந்தஸ்வாமியின் பெருமையைப் பாடும் தகுதியும் தமக்கு உண்டோ என்றெண்ணித் தவித்த அருணகிரியார், தனது குழப்பத்தைத் தகப்பன்சாமியிடம் தெரிவிக்க, ஞானப்பழமாகிய கந்தவேள் "முத்தைத்தரு பத்தித் திருநகை" என்று முதலடியைக் கொடுக்க, பொழியத்தொடங்கியது தெள்ளு தமிழ்க் கவி மழை அவரிடமிருந்து. ஸ்கந்தகுருநாதனின் அருட்தலங்களெங்கும் சென்று அருணகிரிநாதர் அவரது புகழை உளமுருகிப் பாடப் பாட, சந்தம் கொஞ்சும் திருப்புகழின் மணம் புவியெங்கும் பரவத்தொடங்கியது. கந்தரலங்காரம், கந்தர் அநுபூதி என்பன போன்றவையும் ஆறுமுகனின் அடியார்களிடையே பெரும்புகழ் பெற்றன.

ஓடித் தலம் பல தேடி அருளைப் பாடிக் களித்த கவிக்கோ, இறுதியாக அடங்குமிடமாகத் தான் அவதரித்த தலத்தையே தேர்ந்தெடுத்தார். ஆனால், அவர் தனது உடலை உதிர்த்து, உலகளந்த பெருமாளின் மருகனான முருகனுடன் இரண்டறக் கலக்குமுன், கிளியின் உடலுள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து செய்யவேண்டிய செயலுக்காகத் தனது திருமேனியை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் ஓரிடத்தில் விட்டுச் சென்றார்.

பக்தர்கள் நிறைந்த உலகில் பாதகர்களும் எப்போதும் இருப்பர். அதுபோன்ற, அருணகிரியாரின் அளப்பரிய புகழ்மீது பொறாமை கொண்ட ஒரு பாதகன், அவர் மீண்டும் தனது மேனியில் உட்புகுமுன், அதைக் கண்டெடுத்து அதற்கு எரியூட்டினான். அப்பாதகச் செயல் நிகழ்ந்த இடமே இப்புகைப்படத்திலுள்ள இடம். இது அருணைத் திருக்கோயிலின் பரந்த பிரகாரத்தில், நந்தவனம் செல்லும் வாயிலுக்கருகில் அமைந்துள்ளது. இதுவே ஈடிணையற்ற அமுதினும் இனிய தமிழ்க்கவி அடங்கிய இடம் (சமாதி) என்பது சிலர் கூற்று.

இதே திருக்கோயிலினுள், நந்தவனத்தைக் கடந்து கோசாலைக்கு அருகில் உள்ள மதிற்சுவற்றின் அடியில் ஒரு அழகிய சிறு லிங்கம், நந்தியுடன் அமைந்துள்ளது. இதற்கு தினசரி வழிபாடு நிகழ்கின்றதா என்று தெரியவில்லை. கோசாலையில் உள்ள பசுக்களுக்கு உணவளிக்கச் செல்வோர் இவ்விடத்தைத் தரிசிக்கலாம். எவரும் அணுகாத வண்ணம் பாதுகாக்கப்பட்டு வரும் இவ்விடமே அருணகிரிநாதரின் சமாதி ஆகும் என்றும் சிலர் உறுதி கூறுகின்றனர். ஆனால் இவ்விடம் இடைக்காடர் என்ற சித்தர் தவம் செய்த இடமென்றும், இதுவே அவர்தம் ஜீவ சமாதி என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இதில் எது உண்மையோ யாமறியோம். இரு இடங்களில் எது அருணகிரிநாதர் அடங்கிய இடமாக இருந்தாலும், அவ்விடம் அடியவர் பணிந்து வணங்கும் தகுதியுடையதே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பதிணென் சித்தர்களுள் ஒருவரான இடைக்காடரும் நமது வணக்கத்திற்குரியவரே. ஆகவே, அடுத்த முறை நீங்கள் ஆதியோகி அருணாசலேஸ்வரர் மற்றும் அன்னை உண்ணாமுலை அம்மையைத் தரிசிக்கச் செல்லும்பொழுது, மறவாமல் கம்பத்து இளையனாரான கந்தப் பெருமானைப் பணிந்து வணங்கிவிட்டு, அருணகிரிநாதர் அடங்கிய இடத்தில் அமர்ந்து அமைதியான தியானமோ அல்லது மெல்லிய குரலில் அவரது அற்புதப்பாடல்களில் ஏதாவதொன்றைப் பாடியோ, சந்தப்பெருங்கவிக்கோவான அந்தத் தமிழ்க்கவியைப் பணிந்து, அன்னாரின் அருளாசியைப் பெறத் தவறாதீர்கள்.
ஓம் நமசிவாய.

Thivannamalai, lord siva temple, tamilnadu temples information

Tamilnadu tourist places, south india tourist places, tamil language


This free site is ad-supported. Learn more